விருதுநகர், ஜூன் 3: தமிழகம் முழுவதும் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, சக மாணவ, மாணவியரை சந்திக்கும் உற்சாகத்தில் பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிக்கு வந்த உடன் புதிய பாடப்புத்தங்களை ஆசிரியர்கள் வழங்கியதும், உற்சாகத்துடன் பெற்றுக்கொண்டனர். பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் 1,483 பள்ளிகள் உள்பட 1,613 பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையில் இருந்த மாணவ, மாணவியர் தங்களது சக நண்பர்களை பார்க்கும் உற்சாகத்தில் பள்ளிகளுக்கு வந்தனர். பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பூ, மிட்டாய் வழங்கி வரவேற்றனர். பழைய மாணவர்கள் தங்களது நண்பர்களை கண்டதும் உற்சாகத்தில் கட்டி தழுவிக்கொண்டனர்.
பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து மாணவ, மாணவி யருக்கும் பாடநூல்களை வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் முன்கூட்டியே பாடநூல்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களிலும் 987 அரசு, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகள், 214 நடுநிலைப்பள்ளிகள், 282 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 1,483 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவியருக்கு பாடநூல்கள் பள்ளிகளில் காலையிலேயே வழங்கப்பட்டன. புதிய பாடப்புத்தங்களை மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டனர்.
* வில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள 119 பள்ளிகளில் படிக்கும் 6,161 மாணவ, மாணவியருக்கு பள்ளி தொடங்கிய அன்றே தமிழ்நாடு அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
வில்லிபுத்தூர் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் தாளாளர் அருள்திரு பால்தினகரன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் கவுசல்யா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அனிட்டா வரவேற்றார்.வில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகேசன், அனுராதா ஆகியோர் பேசினர். விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஞானராஜ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜெனிபா நன்றி கூறினார். * ராஜபாளையம் நகராட்சி 10 ஆவது வார்டு தொடக்கப்பள்ளியில் தலைமையாசியர் பழனிச்செல்வி வரவேற்றார்.
மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசியபோது: என்னுடைய ஆசை எல்லாம் விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவிதத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும்.அதிலும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கல்வியில் சிறப்பிடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை, என்றார். முன்னதாக முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ள 12 மாணவர்களுக்கு எம்எல்ஏ தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம், சீர்மரபினர் நல வாரிய மாநில துணைத் தலைவர் அருண்மொழி, சிவகாசி மாவட்டக்கல்வி அலுவலர் செந்தில்குமார் (தொடக்க கல்வி) ஆகியோர் மலர் மாலை அணிவித்து சிறப்பித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வி, சீனிவாசன், மலர்க்கொடி, வட்டார வள மைய மேற்பார்வையர் வேணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சண்முகத்தாய், உமாமகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.