ஊட்டி, செப்.13: நீலகிரி மாவட்டத்தில், திமுக முப்பெரும் விழாவை நாளை மறுநாள் (15ம் தேதி) சிறப்பாக கொண்டாட வேண்டும் என நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்தநாள் மற்றும் திமுக தோற்றுவித்த நாள் ஆகியவை உள்ளடக்கிய முப்பெரும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா வேலூர் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மிக எழுச்சியுடன் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாளை மறுநாள் (15ம் தேதி) பேரறிஞர் அண்ணா 115-வது பிறந்தநாள் மற்றும் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதுபோல குன்னூர், கோத்தகிரி கொணவக்கரை, பெங்காம் ஆகிய பகுதிகளிலுள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியேற்றியும் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், கிளை பகுதிகளிலும் கொடியேற்றியும், பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் எழுச்சியுடன் நடைபெறும், முப்பெரும் விழா நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னணியினர், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்புற நடைபெற உதவ வேண்டுகிறேன். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தொடர்புடைய நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்புடன் செய்ய வேண்டும். இவ்வாறு, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் கூறியுள்ளார்.