சேலம், ஜூலை 7: சேலம் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மூலம் 2205 டன் சத்துமாவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை இலக்காக கொண்டு ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் முன்பருவக்கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலத்தை உறுதிசெய்வது மட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்கள், பாலுட்டும் தாயமார்கள், வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மூலம் இணை உணவு வழங்குதல், முன்பருவக்கல்வி வழங்குதல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக்கல்வி வழங்குதல், உடல்நல பரிசோதனை, தடுப்பூசி பணிகள், பரிந்துரை சேவைகள் மற்றும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் சுகந்தி கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குதல், நோய் தடுப்பு சேவை, சுகாதார பரிசோதனை, பரிந்துரை சேவைகளும், 2வயது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இணை உணவு, நோய் தடுப்பு சேவை, சுகாதார பரிசோதனை, பரிந்துரை சேவைகள், முன்பருவக்கல்வி வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இணை உணவும், பாலூட்டும் தாய்மார்களுக்கு நோய் தடுப்பு சேவை, சுகாதார பரிசோதனை, பரிந்துரை சேவைகள், ஊட்டச்சத்து மற்றும் முன் பருவக்கல்வி வழங்கப்படுகிறது.
6 மாத குழந்தைகள் முதல் 6வயது குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில், சத்துமாவு வழங்கப்படுகிறது. சத்து மாவு குழந்தைகளுக்கு ஒன்றும், கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு தனித்தனியாக வழங்கப்படுகிறது. இந்த சத்துமாவில் வைட்டமின்-ஏ, சி, டி சத்துக்கள், இரும்புச்சத்து, தாதுச்சத்துக்களும் சேர்க்கப்படுகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏலக்காய் மற்றும் வெனிலா சுவையும் சேர்க்கப்படுகிறது. 100 கிராம் சத்துமாவிலிருந்து குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 400 கலோரி ஆற்றலும், 15 கிராம் புரத சத்தும் கிடைக்கிறது. வளரிளம் பெண்கள், கர்ப்பணி பெண்கள், பாலுட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவில் கூடுதலாக கடலை பருப்பு, உளுந்து, நிலக்கடலை, செறிவூட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் உள்ளிட்டவை கூடுதலாக சேர்த்து வழங்கப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் 3,51,928 பேரும், 2 வயது 3 வயதுடைய குழந்தைகள் 1,26,087 பேரும், 3 வயது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 2,21,386 பேரும், கர்ப்பிணி பெண்கள் 1,04,174 பேரும், பாலுட்டும் தாய்மார்கள் 90,740 பேர் என 8 லட்சத்து 94 ஆயிரத்து 315 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 6 மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்து 205 டன் சத்துமாவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.