தர்மபுரி, செப்.11: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த நான் முதல்வன் மதிப்பீட்டு எழுத்து தேர்வில் 703 பேர் பங்கேற்றனர். 487 பேர் தேர்வு எழுத வரவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் நான் முதல்வன் உதவி தொகைக்காக மதிப்பீட்டு தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு 4 மையங்களில் நடந்தது. அளே தர்மபுரி அரசு மேல்நிலைப்பள்ளி, அதியமான் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக 1190 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 703 பேர் தேர்வு எழுதினர். 487 பேர் தேர்வு எழுத வரவில்லை. தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் கல்வி அதிகாரிகள் தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்திருந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் கடந்த மே மாதம் 1 லட்சம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்திற்கான பதிவு அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பொதுவான சேவை மையங்கள் மூலம் தொடங்கியது. இத்திட்டத்தில் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் பல்வேறு தொழில்களில் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நான் முதல்வன் திட்டம் தமிழகத்தில் இளைஞர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது,’ என்றனர்.