தர்மபுரி, ஜூன் 16: குரூப் -1 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி முதல் நிலை தேர்வை, தர்மபுரி மாவட்டம் முழுவதும் 37 தேர்வு மையங்களில் 6,963 பேர் எழுதினர். 1,648பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ நிலையிலான 72 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் 37 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 8,611 பேர் எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், இதில் 6,963பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
1,648 பேர் தேர்வு எழுத வரவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை நடத்துவதற்கு, 37 கண்காணிப்பு அலுவலர்களும், 7 மொபைல் யூனிட்டுகளும் நியமிக்கப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் இத்தேர்விற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் இத்தேர்வு நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்களிலும், பஸ்கள் நின்று செல்லும் வகையிலும், இத்தேர்விற்காக சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டன. தேர்வு அறைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த வசதிகள், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என இத்தேர்வு பணிகளில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இத்தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடந்தது. டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்திலிருந்து – பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன், தேர்வர்களின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றின் நகல் மட்டுமே தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. முன்னதாக காலை 8.30 மணிமுதலே தேர்வுகள் தேர்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதேசமயம், காலை 9 மணிக்கு பின்னர் வந்த தேர்வுகள், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தேர்வு மையங்களுக்குள் கொண்டுசெல்ல தடை
விதிக்கப்பட்டிருந்தது.