தர்மபுரி, ஆக.29: தர்மபுரி மாவட்டத்தில், வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க 2 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 5 புதிய நூலகங்கள் அமைக்க இடங்கள் தேர்வு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில், ஒரு மாவட்ட மைய நூலகம், 6 முழுநேர நூலகங்கள், 27 கிளை நூலகங்கள், 69 ஊர்புற நூலகங்கள், 33 பகுதி நேர நூலகங்கள், ஒரு நடமாடும் நூலகம் என மொத்தம் 137 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் 24.07 லட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. 10 ஆயிரம் வாசகர்கள் நாளிதழ், புத்தகங்கள் படித்து செல்கின்றனர்.
புரவலர்களாக 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நூலக உறுப்பினர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். மாவட்ட மைய நூலகத்தில் மட்டும் 1.62 லட்சம் புத்தகங்கள் உள்ளன. இங்கு பொதுஅறிவு, வரலாறு, அரசியல், நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியம், சிறுவர்கள், மகளிருக்கு என தனி நூல்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ் என போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்நூலகத்திற்கு தினசரி 500 முதல் 600 வாசகர்கள் வருகின்றனர். நன்கொடையாளர்கள், புரவலர்கள் என 256 பேர் உள்ளனர். மாவட்ட மைய நூலகம் 2 தளத்துடன் இயங்கி வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனைகள், வாரச்சந்தை பகுதி என 5 இடங்களில் புதிய நூலகங்கள் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. அரூர், பென்னாகரம் பஸ் நிலையம் அருகே நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இளம்வயதினரிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளை வாசிப்பு திறன் ஏற்படுத்தும் விதமாக பொ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேரும், குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 மாணவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் மாணவ, மாணவிகள், நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களை நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி கூறுகையில், ‘தமிழகத்தில் 100 நூலகங்கள் புதியதாக அமைக்கப்பட உள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் 5 நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது. பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து, மாணவர்களை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதுவரை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் வாசிப்பு பழக்கம், மிகவும் அரிதாகி கொண்டே இருக்கிறது. வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் வெற்றியாளர்களாக இருப்பார்கள். வெற்றியாளர்களிடம் வாசிப்பு பழக்கம் நிச்சயம் இருக்கும். இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது, இதனை பிரிக்க முடியாது,’ என்றார்.