திருத்தணி, நவ.15: திருவள்ளூர் மாவட்டத்தில் 12 இடங்களில் துணை சுகாதார நிலையங்களுக்கு ₹3.55 கோடியில் கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி திறந்து வைத்தனர். திருத்தணி அடுத்த பீரகுப்பம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் வரவேற்றார். திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன், நலப் பணிகள் இணை இயக்குநர் சேகர், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், செந்தில்குமார், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தனர்.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தை திறந்து வைத்தனர். இதை தொடர்ந்து, வீரமங்கலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், பாண்டரவேட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், மத்தூரில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் மாவட்டம் முழுவதும், 12 இடங்களில் துணை சுகாதார நிலைய கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8713 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இதில் 1500 துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், தற்போது படிப்படியாக துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 12 புதிய கட்டிடங்கள் ரூ.3.55 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூரில் மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டு, 840 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் திருத்தணி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.45 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் மாவட்ட தலைமை மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும்.
இன்று சர்க்கரை நோய்கள் தினம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம் நடத்தி சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக மருத்துவர்கள் ஆலோசனை பெற வேண்டும். நடைபயிற்சி, உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களை ஆய்வு செய்து, தரம் இல்லாத உணவகங்கள் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்ட அலுவலர் தீபா, வட்டாட்சியர் மதன், ஒன்றிய திமுக செயலாளர்கள் ஆரத்தி ரவி, கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி சிரஞ்சீவி, வருவாய் ஆய்வாளர் வித்யா லட்சுமி மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.