ஈரோடு, ஜூன் 5: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 100 டிகிரி சுட்டெரித்த வெயில் காரணமாக, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல், 100 டிகிரிக்கு மேல் வெயில் பொதுமக்கள் வாட்டி வதைத்து வந்தது. பின்னர், கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து, வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் கவலையடைந்து வந்தனர். ஆனால், அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கடந்த 28ம் தேதி நிறைவடைந்தது வரை, வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. அவ்வப்போது, மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த நிலையில், கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மாவட்டத்தில் நேற்று 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில், வான ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிக்கு உள்ளாகினர். வெயிலின் தாக்கம் காரணமாக, எப்போது பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டுச்சிலை, ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்ற பகுதிகளில் மதிய நேரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அக்னி நட்சத்திர நாட்களில் கூட்டமின்றி காற்று வாங்கிய ஜூஸ் கடைகளில், கடந்த 3 நாட்களாக கூட்டம் அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் உள்ள இளநீர், நுங்கு கடைகளில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.