ஊட்டி, நவ.8: நீலகிரியில் வன உரிமைச் சட்டம் – 2006 அமல்படுத்துதல் குறித்து பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஊட்டியில் கலெக்டர் தலைமையில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டாரங்களிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் வனங்களை ஒட்டியே வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மக்களுக்கு என்று அரசு தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கான உரிமைகளையும் அறிவித்துள்ளது. வன உரிமை சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டு, அதில், பல்வேறு உரிமைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில், வன உரிமைச் சட்டம் – 2006 அமல்படுத்துதல் தொடர்பான பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் கேர்ன்ஹில் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசியதாவது: வன உரிமைச் சட்டத்தின் படி, பல்வேறு சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், தனி மனித உரிமை, சமூக உரிமை, வளர்ச்சிப்பணி உரிமை உட்பட பல உரிமைச் சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோன்ற சட்டங்களை பழங்குடியின மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்ளும் பட்சத்தில் நமக்கான உரிமைகளை நாமே பெற்றுக் கொள்ளவும், நமக்கான தேவைகளை கேட்டு பெறவும் முடியும். மேலும், தனிமனித உரிமை பெற்றுள்ள பழங்குடியின மக்களுக்கு அடுத்த கட்டமாக சமூக உரிமை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழங்குடியினர்களுக்கு கடனுதவிகள் வழங்க ஏதுவாக வங்கியாளர்களுக்கு தனியாக வன உரிமைச் சட்டம் தொடர்பாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பழங்குடியின மக்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று பணிபுரிய விருப்பம் குறைவாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனால் வேலைவாய்ப்பு வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் அருகிலுள்ள மாவட்டமான கோவை மாவட்டத்தில்தான் உள்ளது. நீலகிரி மாவட்டத்திலிருந்து 3 மணி நேரம் பயண தொலைவுதான் என்பதால் அங்கு சென்று பணிபுரியும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்வில், வன உரிமைச் சட்டம் 2006 மாநில அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜன், பழங்குடியினருக்கு வன உரிமைச்சட்டம் குறித்து பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் (நீலகிரி வனக்கோட்டம்) கௌதம், ஊட்டி ஆர்டிஓ சதீஸ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) சக்திவேல், டாக்டர் தருண் சோப்ரா மற்றும் பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.