வேலூர், செப்.4: வேலூர் மாவட்டத்தில் பகலில் வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பரவலாக மிதமான மழை பெய்தது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேபோல் விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது.
வேலூர் மாவட்டத்திலும் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு மேல் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், மேலாலத்தூர், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, பொன்னை, மேல்பாடி, திருவலம் என பரவலாக மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. அதிகபட்சமாக பொன்னையில் 34 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 138.70 மி.மீ. சராசரி மழை அளவு 15.41 மி.மீ. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): வேலூர் 27.50, குடியாத்தம் 10.60, மேலாலத்தூர் 18.20, காட்பாடி 23, கே.வி.குப்பம் 25.40.