மதுரை, மே 20: மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கள்ளந்திரியில் 45 மிமீ மழை பதிவானது. மதுரை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து 100 முதல் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த 12ம் தேதி முதல் புறநகரில் விமான நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவானது. 15ம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் வெயிலின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதன்படி, கடந்த 4 நாட்களாக மதுரை மாநகர் மற்றும் புறநகரில் வெயிலின் கடுமை குறைந்துள்ளதுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன்படி நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மிமீ) வருமாறு: கள்ளந்திரி 45, மதுரை வடக்கு 37, தல்லாகுளம் 34, சிட்டம்பட்டி 12, பேரையூர் 21, எழுமலை 24 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 274 மிமீ மழையும், சராசரியாக 12.5 மிமீ மழையும் பதிவானதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வளிமண்டல காற்றுதிசை மாறுபாடு காரணமாக நேற்றும் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலையில் கருமேகங்கள் திரண்டு சோழவந்தான், திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை ெபய்தது. இதேபோன்ற மழைப்பொழிவு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.