கோவை, மே 8: கோவை மாவட்டத்தில் நடந்த நீட் தேர்வினை 5 ஆயிரத்து 47 மாணவர்கள் எழுதினர். 138 பேர் தேர்வு எழுதவில்லை. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நடத்தப்பட்டது. தேர்வு மையத்திற்கு மதியம் 11 மணி முதலே மாணவர்கள், பெற்றோருடன் வந்தனர். மாணவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர்களின் உதவியுடன் தேர்வு மைய நுழைவு வாயிலில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மாணவிகள் பலர் நகைகள் போன்றவற்றை அணிந்து வந்திருந்தனர்.
அதனை நுழைவு வாயிலில் கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள் மதியம் 1.15 மணி முதல் அமர வைக்கப்பட்டனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 9 மையங்களின் மூலம் 5,185 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர். இந்நிலையில், தேர்வினை 5,047 மாணவ, மாணவிகள் எழுதினர். 138 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வினை 9 மாற்றுத்திறனாளிகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். உயிரியல் பாடம் தொடர்பான கேள்விகள் எளிதாக இருந்ததாக கூறினர். மேலும், கடந்த ஆண்டு தேர்வின் போது ரப் பேஜ் இரண்டு தாள்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு தாளாக குறைக்கப்பட்டு இருந்தது என்றனர். தேர்வு மையங்களில் பாதுகாப்பிற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.