கிருஷ்ணகிரி, நவ.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளிலிருந்து சுமார் 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 201 டவுன் பஸ்களாகும். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கிருஷ்ணகிரி கிளையில் 70 டவுன் பஸ்களும், ஓசூர் கிளையில் 64 டவுன் பஸ்களும், ஊத்தங்கரை கிளையில் 19 டவுன் பஸ்களும், தேன்கனிக்கோட்டை கிளையில் 28 டவுன் பஸ்களும், திருப்பத்தூர் கிளையில் 28 டவுன் பஸ்களும் என மொத்தம் 201 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குக்கிராமங்களிலும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காய்கறி, பழங்கள் உள்பட விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல, இந்த பஸ்கள் பேருதவியாக உள்ளன.
காலை நேரங்களில் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு கட்டிட வேலைக்கு செல்வோர், விவசாய கூலி வேலை மற்றும் கடைகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகள் அரசு பஸ்களிலேயே பயணம் செய்கின்றனர். திமுக அரசு பொறுப்பேற்றவுடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர். பஸ்களின் முன்புறம் பெண்களுக்கு இலவச பயணம் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், எளிதாக அடையாளம் காணும் வகையில் பிங்க் கலரில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலவச பயணம் மேற்கொண்ட பெண்கள் கூறுகையில், ‘தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின், கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவியேற்றதும், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தார். இந்தத் திட்டம், மே 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இலவச பஸ் பயணத்தால், வேலைக்கு செல்லும் எங்களை போன்ற பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இதனால், போக்குவரத்து செலவு மிச்சமாகிறது. அனைத்து அரசு பஸ்களிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் இதுவரை பஸ் பயணத்திற்காக வழங்கிய கட்டணத்தை சேமித்து, எங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த திட்டத்தை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்,’ என்றனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில், அரசு டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணத்திட்டம் முக்கியமானதாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ், 9 கோடியே 36 லட்சத்து 9 ஆயிரத்து 99 மகளிர் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். ேமலும், 9 லட்சத்து 23 ஆயிரத்து 828 திருநங்கைகள், 99 ஆயிரத்து 855 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 9 கோடியே 46 லட்சத்து 31 ஆயிரத்து 782 பேர், அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்,’ என்றனர்.