ஊட்டி, ஜூன் 27: ஊட்டி அவரை விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்க்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், பூண்டு, காலிபிளவர், பீன்ஸ், பட்டாணி மற்றும் ஊட்டி அவரை ஆகியவை அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. இதில், ஊட்டி அவரை சமவெளி பகுதிகளில் வாழும் மக்களை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் விரும்பி உண்ணும் ஒரு பொருள். இதனால், இதன் விலை எப்போதுமே உச்சத்தில் இருக்கும். குறைந்தபட்சம் கிலோ ஒன்று ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படும். அதேசமயம், விளைச்சல் அதிகமானால் விலையில் சரிவு ஏற்படும். கடந்த சில மாதங்களாக நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் அவரை அதிகரித்திருந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. தற்போது கிலோ ஒன்று தரத்திற்கு ஏற்ப ரூ.80 முதல் 100 வரையே விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி அவரை விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.