திருவாரூர், ஜூலை 23: மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி 1ம் வகுப்பு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு நேற்று கலந்து கொண்ட திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு, மாணவருக்கு கையேடு கொடுத்து பாராட்டு தெரிவித்தார். கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட மணக்கால் ஊராட்சியில் இயங்கி வரும் ஒன்றிய துவக்கப் பள்ளியில் 1முதல் 5ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஆண்டுதோறும் 1ம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பள்ளிக்கு பெற்றோர்கள் மூலம் சீர்வரிசை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டில் இந்த பள்ளியில் 1ம் வகுப்பில் மட்டும் 53 புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியானது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு, அங்குள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து, மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டும், பரிவட்டம் கட்டப்பட்டும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பெற்றோர்கள் சார்பில் இந்த பள்ளிக்கு கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் இயந்திரம், பீரோ, நாற்காலி, டேபிள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ்க்கான எல். இ. டி .டிவிக்கள், கற்றல் கற்பித்தலுக்கான உபகரணங்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் பெற்றோர்கள் மூலம் தலையில் சுமந்து செல்லப்பட்டு வழங்கப்பட்டன.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாரு கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீர் பணி காரணமாக அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து நேற்று பள்ளிக்குச் சென்ற கலெக்டர் சாரு அங்கு பெற்றோர்கள் மூலம் பள்ளிக்கு வழங்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளி முழுவதையும் சுற்றி பார்த்து பள்ளிக்கு என்ன தேவை என தலைமை ஆசிரியர் குணசேகரனிடம் கேட்டறிந்தார்.மேலும் முதல்வர் மு. க. ஸ்டாலினின் சீரிய திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர்கள் மூலம் வகுப்பறையில் செய்து வைக்கப்பட்டிருந்த செய்முறை பயிற்சிகளை பார்வையிட்டார்.
மேலும் நேற்று பள்ளி விடுமுறை தினம் என்ற நிலையில் பள்ளிக்கு அருகில் வசித்து வரும் ஒரு சில மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கையேடுகளை கலெக்டர் சாரு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன்,கொரடாச்சேரி வட்டார கல்வி அலுவலர்களான விமலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தா, ஆசிரியர் பயிற்றுனர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கமலாம்பாள் ராஜகோபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.