திருச்செங்கோடு, நவ.21: திருச்செங்கோட்டில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், திருச்செங்கோடு வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலர்கள் பிரபுகுமார், அருள், டாக்டர்கள் முனுசாமி, சிவக்குமார், தர்மராஜூ, மைதிலி, முகிலரசி, தொழில்நுட்ப வல்லுனர்கள் வனிதாலட்சுமி, குமரன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். திருச்செங்கோடு வட்டார ஆசிரிய பயிற்றுனர் ரகுபதி வரவேற்றார்.
தொடர்ச்சியாக, பார்வைத் திறன், காது கேட்கும் திறன், கை, கால், தசை மூட்டு மற்றும் உடலியக்க செயல்பாடுகள் குறித்து, மருத்துவக் குழுவினரால் பரிசோதனை நடத்தப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் 113 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 32 ேபருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 6 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். முகாமில் ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் மற்றும் பள்ளி ஆயத்த மைய உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுனர் சரவணன் நன்றி கூறினார்.