ஊட்டி, ஆக.14: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், ஊட்டியில் உள்ள மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கான கணித நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை கிறிஸ்டின் பியூலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நம்பிக்கையூட்டும் கணிதம் என்ற நிகழ்ச்சியை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடத்தினார்.
நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை சாந்தி, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு புரியும் சைகை மொழியில் கணித நிகழ்ச்சியை மொழி பெயர்த்து கூறினார்.மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் கணிதத்தை மிகவும் உற்சாகத்துடன் கற்றுக் கொண்டனர். பாடல்கள், கணித சூத்திரங்கள், புதிர் கணக்குகள் போன்றவற்றை சாதாரண மாணவர்களை போன்று மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும் கற்றுக்கொண்டது பிரமிப்பூட்டுவதாக இருந்தது.
ஆசிரியர் ராஜூ கூறுகையில், ‘‘நாம் சமுதாயத்தின் ஒரு பகுதியை இதுவரை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது. இத்தகைய மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை ஊக்குவிப்பது நம் அனைவரின் கடமை’’ என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.