வேலூர், ஆக.20: பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால், அதனை உரிய பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2013-14ம் நிதியாண்டில் 1ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் வகுப்புக்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ₹1000 முதல் ₹7000 வரை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின்போது மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வருடாந்திர உதவித்தொகை 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ₹1000 லிருந்து ₹2 ஆயிரமாகவும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ₹3 ஆயிரத்திலிருந்து ₹6 ஆயிரமாகவும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ₹4 ஆயிரத்திலிருந்து ₹8 ஆயிரமாகவும், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ₹6 ஆயிரத்திலிருந்து ₹12 ஆயிரமாகவும், தொழிற்கல்வி மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ₹7 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அரசாணைப்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ₹3 ஆயிரமும், இளங்கலை பட்டத்திற்கு ₹5 ஆயிரமும், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ₹6 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் பலருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்து போதிய புரிதல் இல்லாமலும் அறியாமையாலும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்பான அரசாணை மற்றும் உதவித்தொகை விபரங்கள் பள்ளி மற்றும் கல்லூரி தகவல் பலகையில் இடம் பெற செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உதவித்தொகை விண்ணப்பங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிடைக்கும் வகையிலான வசதியினை ஏற்படுத்திட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து உதவித்தொகை எளிமையாக சென்றடையும் வகையில் ஒரு பொறுப்பாசிரியரை நியமித்திட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி நிலை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையினை தங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் உதவித்தொகை குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். இவ்வுதவித்தொகை விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலங்களில் பெற்று தங்கள் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகளிலும் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் எவரும் விடுபடாமல் இவ்வுதவித்தொகையினை பெற்று உரிய பயனாளிகளுக்கு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.