திருத்துறைப்பூண்டி, செப். 5: திருத்துறைப்பூண்டி பெரிய கோயில் என அழைக்கப்படும் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, சீர்வரிசை பொருட்கள் வழங்கி, திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் 2023-2024ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பு எண் 35-ன் படி நாகப்பட்டிணம் இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராணி ஆகியோர் ஆலோசனைப்படி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தில் தாலியும், புத்தாடைகளும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது. இதர சீர்வரிசை பொருட்கள் உபயதாரர் மூலம் வழங்கப்பட்டன. விழாவில் செயல் அலுவலர் முருகையன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், கணக்கர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.