திருவள்ளூர், அக்.20: மாற்றுத்திறனாளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அரசுத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் த.பிரபு சங்கர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட தனியார் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பில் 2ம் ஆண்டு சர்வதேச பராமரிப்பாளர் விழா மற்றும் உலக மனநலம் தினவிழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆனந்தி அனைவரையும் வரவேற்றார். லிவிங்ஸ்டன் விளக்க உரையாற்றினார்.
இந்த விழாவில் கலெக்டர் த.பிரபுசங்கர் பேசும்போது, இந்த கூட்டமைப்பு தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது. இதற்கிடையே இந்த அமைப்பு சார்பில் சர்வதேச பராமரிப்பாளர்களுக்கான தினவிழா மூலம் அவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் நாள்தோறும் மனநலம் பாதித்த, மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பவர்களின் சிரமங்களையும் அறிந்து கொள்ள முடியும். எனவே அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைப்பதற்கு கட்டாயம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்திய அரசுத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், சிறந்த பராமரிப்பாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் சேகர், வட்டாட்சியர் சுரேஷ்குமார், திட்ட மேலாளர் நடேசா, கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் ஜி.முருகன், மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன், சூசைராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நலத்திட்ட பணிகள் ஆய்வு
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் சுமார் ₹5.5 கோடி செலவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதிக்கு வந்த கலெக்டர் பிரபு சங்கர், நலத்திட்ட பணிகளை ஆய்வுசெய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும், பணிகள் நடைபெறும் போது அதிகாரிகள் உடனிருக்க வேண்டும் எனவும், கால்வாய் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) லதா, செயல் அலுவலர் சதீஷ், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி ஆகியோர் உடனிருந்தனர்.
பதற்றம் வேண்டாம்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத் தொடர்புத்துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர்கால எச்சரிக்கை செய்தி இன்று (20ம் தேதி) செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த பேரிடர்கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். மேலும், பொதுமக்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுவதாக கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.