பெரம்பலூர், செப். 12: வெளிநாடு தப்பிச் சென்றவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் செல்லமுத்து, மார்க்.கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, பென்ன கோணம் கிராமம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பிச்சைபிள்ளை. இவரது மகன் செல்வம் என்ற மாற்றுத்திறனாளி, எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மீது திட்டமிட்டு கொலை மிரட்டல் விடுத்து, கொலை வன்மத்தோடு, அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் பரமசிவம் என்பவர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் செல்வம், தற்போது வரை உயிருக்கு போராடி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இரவு நடைபெற்ற இந்த சம்பவத்திலிருந்து மருத்துவமனையில் புகார் கொடுத்தும் மங்களமேடு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சம்பந்தப்பட்ட பரமசிவம் காவல்துறையின் அலட்சியப் போக்கால் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதோடு இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச்சேர்ந்த உலகநாதன் என்பவரையும் விசாரிக்கவேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.