சேலம், ஜூன் 3: சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன் களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. நேற்று (2ம் தேதி) தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணியை, ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இக்கணக்கெடுப்பிற்காக வீடுகளுக்கு வரும் முன்களப்பணியாளர்களுக்கு, தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.