திருவண்ணாமலை, ஜூலை 28: திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிக்கு ேதசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 115 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்து. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(யுடிஐடி) வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது.
முகாமில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, பொது மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பரிசோதித்து, அடையாள அட்டைகள் பெற தகுதியுள்ளவர்களா என சான்று வழங்கினர். அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று நடந்த முகாமில் 115 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் போன்ற கோரிக்கைகளுக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுத்து தகவல் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.