ஊட்டி,ஜூன்7: ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பங்கேற்று 5 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 795 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்,10 பயனாளிகளுக்கு ரூ.6500 மதிப்பில் ஊன்றுகோல்கள்,4 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 140 மதிப்பில் காதொலி கருவிகள் என மொத்தம் 19 பேருக்கு ரூ.51 ஆயிரத்து 435 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. 15 பேருக்கு மாற்று திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
40க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை பதிவு நடைபெற்று வருவதை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன்,சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், ஊட்டி நகராட்சி நகர்நல அலுவலர் சிபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.