திருத்தணி, ஜூன் 20: திருவள்ளூர் மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று உடனடியாக இணைப்பு சக்கரம் பொருத்திய மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிய தமிழக அரசு மற்றும் எம்எல்ஏ சந்திரனுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு திராவிட மாடல் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருவதாகவும், இதனால் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தார். இதில் திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரத்தி ரவி உட்பட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் நிரந்தரமாக குடியிருக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, திருத்தணி பகுதியில் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக வசித்து வரும் 37 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வருவாய்த்துறை சார்பில் வேலஞ்சேரி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2 சென்ட் நிலம் வீதம் 37 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பட்டா பெற்ற திருநங்கைகள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார். இதில் திருத்தணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, மண்டல துணை வட்டாட்சியர் தேவராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கமல், தாமோதரன், நகர திமுக துணை செயலாளர் கணேசன், சிறுபான்மை நல பிரிவு மாவட்ட அமைப்பாளர் சித்திக் அலி, மீசை வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.