திருவண்ணாமலை, ஜூன் 3: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.98 லட்சத்தில் நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், சாலைவசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர் தேக்கதொட்டி அமைத்துதருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 392 நபர்கள் மனு அளித்தனர்.
அதன்மீது, விரைந்த நடவடிக்கை எடுத்து தேர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். இந்நிலையில், உதவி உபகரணங்கள் கேட்டு ஏற்கனவே மனு அளித்திருந்த 11 மாற்று திறனாளிகளுக்கு, மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு நவீன செயற்கை கால்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10. 98 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால்களை நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுயதொழில் உதவி கோரி மனு அளித்த ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.