பண்ருட்டி, அக். 25: மாறு வேடத்தில் போலீசார் சென்று, மூட்டை, மூட்டையாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். மேலும் கார், 2 மொபட்களையும் கைப்பற்றினர். பண்ருட்டி வி.எஸ்.பி. நகரில் உள்ள சமயபுரம் முத்துமாரியம்மன் வீதியை சேர்ந்தவர் சங்கர்(43). இவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இவரது வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சங்கரை கைது செய்தனர். இதை தொடர்ந்து சங்கர் கொடுத்த தகவலின் பேரில் ஆனத்தூரை சேர்ந்த சித்திக் அலி (39), ஓறையூரை சேர்ந்த பிரபாகரன் (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும், இரண்டு மொபட்டுகள், மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர் மாறுவேடத்தில் சென்று, பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 3 பேரை அதிரடியாக கைது செய்த பண்ருட்டி போலீசாரை, எஸ்பி ராஜாராம், பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் பாராட்டினர்.