நன்றி குங்குமம் டாக்டர் உலக அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அதிலும், கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பதும் கவலைதரும் விஷயமாக உள்ளது. எனவேதான், அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன, தற்காப்பு முறைகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மார்பகப் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் எஸ். ராஜசுந்தரம்.மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை இந்த காரணத்தினால்தான் வருகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. உதாரணமாக, பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைவது, 30 வயதுக்குப் பிறகு நடக்கும் திருமணங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் குழந்தைப்பேறின்மைக்கான தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், தாமதமாக மாதவிடாய் நிற்பது, உடல்பருமன், ரத்த சொந்தங்களில் யாருக்காவது இருந்திருந்தால் வருவது. இவையெல்லாம் பொதுவான காரணங்களாக கூறப்படுகிறது. மேலும், சமீப காலமாக பெண்கள் புகைபிடிக்கவும்,, மது அருந்தவும் தொடங்கிவிட்டார்கள். இவைகள் கூட தற்போது மார்பகப் புற்று ஏற்பட ஒரு காரணமாக அமைவதாக கூறப்படுகிறது. இதைத்தவிர, கருத்தடை மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்வதும் கூட மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவையெல்லாம்தான் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்களாக அமைகிறது. அதனால், இதுமட்டும் தான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டு கூறமுடியவில்லை.மார்பகப் புற்றுநோய் எந்த வயதினரை தாக்குகிறது?முன்பெல்லாம் 50- 60 வயது பெண்களுக்குத்தான் பெரும்பாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுவந்தது. ஆனால், தற்போது, காலமாற்றம், உணவுப் பழக்கவழக்கங்களால், 30- 50 வயது பெண்களுக்கே மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. வெளிநாட்டு பெண்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் மிக குறைந்த வயதிலேயே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதேச்சமயம், அமெரிக்காவில் 8-இல் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்று வந்தால், இந்தியாவில் 20- இல் ஒரு பெண்ணுக்குத்தான் வருகிறது.அதுவும் 30-50 வயதில் உள்ளவர்களில் 50 சதவிகிதம் வருகிறது. மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?இந்தப் புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் எந்தவித அறிகுறியும் தெரியாது. அது 1 செ.மீ. அளவு வளர்ந்த பிறகே அறிகுறிகள் தெரியவரும்.மற்றபடி பொதுவான அறிகுறிகள் என்றால் மார்பகங்களைச் சுற்றி சிறுசிறு கட்டிகள் போன்று தோன்றுவது. மார்பகக் காம்பில் இருந்து நீர் போன்ற திரவம் வடிதல், மூன்றாவது ஸ்டேஜில் தடிப்புகள் ஏற்படுவது, அந்தஇடம் சிவந்து போதல், மார்பகங்கள் வீங்குவது போன்றவைதான் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயில் எத்தனை வகைகள் இருக்கிறது. சிகிச்சை முறைகள் என்னென்ன?லூமினல் ஏ, லூமினல் பி என 5 வகைகள் இருக்கிறது அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அது எந்த வகை புற்று என்பதை கண்டறிந்து அதற்கேற்ற தெரபியை உபயோகித்து சிகிச்சையளிப்போம். மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை பொதுவாக அக்குளில் தான் பரவும். இது ஆரம்பத்தில் நெறிகட்டிகளைப் போன்றுதான் இருக்கும். இதனை கண்டுபிடிக்க, கட்டிகளை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்து அதனை 20நிமிடத்தில் சோதனை செய்யும் வசதிஎல்லாம் தற்போது வந்துவிட்டது. இதைத்தவிர, ஐந்து வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவை, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, கதிர்வீச்சு தெரபி, ஹார்மோன் தெரபி தார்கெட்டட் தெரபியாகும். தற்போது இதனுடன் இமினோ தெரபியும் சேர்ந்திருக்கிறது மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டால் மார்பகங்களை நீக்குவது ஒன்றுதான் தீர்வா?நிச்சயமாக இல்லை. முந்தைய காலங்களில்தான் மார்பகப்புற்று ஏற்பட்டுவிட்டால், உடனடியாக மார்பகங்களை நீக்கிவிடுவார்கள். ஆனால், தற்போது அப்படியில்லை நிறைய நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. அதனால் முடிந்தளவு மார்பகங்களை நீக்காமல் இருக்கவே முயற்சி செய்துவருகிறோம். உதாரணமாக, 4 செ.மீ. கீழ் புற்று இருந்தால் மார்பகங்களை எடுக்க வேண்டியது இல்லை. அதுபோன்று மார்பகத்தில் ஒரு பகுதியில் மட்டும் இருந்தாலும் மார்பகங்களை எடுக்க வேண்டியது இல்லை. ஒருவேளை கட்டிகள் நிறைய இருந்தால், அப்போது மார்பகத்தில் 1 செ.மீ. மார்ஜின் கொடுத்து மற்றவைகளை நீக்கிவிட்டு அன்கோபிளாஸ்ட் முறையில் மார்பகத்தை மறு சீரமைப்பு முறையில் மீண்டும் பழைய மார்பகம் போலவே செய்துவிடவும் முடியும். அதனால், ஒருவருக்கு மார்பகப் புற்று ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அவருக்கு மார்பகங்களை நீக்குவதற்கு எந்த அவசியமும் இல்லை. மற்றபடி சிலர் விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாக இருந்துவிட்டு புற்று முற்றிய நிலையில் வருவார்கள். அந்தக்கட்டத்தில் அவர்களுக்கு மார்பகம் முழுவதும் புற்று பரவியிருந்தால் மட்டுமே மார்பகங்களை எடுக்க வேண்டிய சூழல் வரும். ஒரு முறை மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் மீண்டும் வரும் வாய்ப்பு இருக்கிறதா?முறையான, முழுமையான சிகிச்சை எடுத்திருந்தால் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியே மீண்டும் வந்தாலும் அது அடுத்த மார்பகத்தில் வரலாம். அதுபோன்று 2 செ.மீ. க்கு மேல் வளர்ந்திருந்தால், அது கல்லீரலிலோ, எலும்பிலோ, நுரையீரலிலோ, மூளையிலோ கூட பரவியிருக்க வாய்ப்பு உண்டு. அதைத் தடுக்கத்தான் முதலில் கீமோ தெரபி கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு, அறுவை சிகிச்சை மூலம் நீ்க்குகிறோம். மற்றபடி மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, இது முற்றிலும் குணமாக்கக் கூடியதுதான். 80 முதல் 90 சதவிகிதம் பேர் முழுமையாக குணமடைந்தும் உள்ளனர். முற்றிய நிலையில் இருந்தால் மட்டும்தான் கொஞ்சம் கடினம். இருந்தாலும், அவர்களுக்கும் தகுந்த சிகிச்சையளித்தால், அவர்களும் மேலும், 5-6 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்க முடியும்.தீர்வு பொதுவாக பெண்கள் எல்லோரும், மாதத்திற்கு ஒருமுறை தங்கள் மார்பகங்களை கையால் தடவி பார்த்து கட்டி ஏதும் தென்படுகிறதா என்று தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் சந்தேகம் தோன்றினால், அதனை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக அது என்ன என்று மருத்துவரை அணுகி சோதித்து கொள்ள வேண்டும். இதனை 30 வயது தொடங்கிவிட்டால், கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதுபோன்று, 40 வயதை அடைந்துவிட்டால்,புல்பில் மெமோகிராம் சோதனை செய்து கொள்ளலாம். அதுபோன்று ஆண்டுக்கு ஒரு முறை தங்களது உடலை முழு பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம், எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, பெரிய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்…