மார்த்தாண்டம், அக்.15: மார்த்தாண்டம் அருகே பணி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த ஆசிரியையை கீழே தள்ளி விட்டு 9 பவுன் செயினை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி வயக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். மார்த்தாண்டத்தில் உள்ள ஒர்க்-ஷாப் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி (28). பிஎட் படித்துவிட்டு, ஆசிரியை பயிற்சிக்காக திருவட்டாரில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பல்லன்விளை ரயில்வே கிராசிங் தாண்டி ஆளில்லா குளக்கரை பகுதியில் வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், மகேஷ்வரி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். இதில் நிலை தடுமாறிய மகேஷ்வரி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி ேகமராவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கீழே விழுந்ததில் காயமடைந்த மகேஷ்வரி, குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.