மார்த்தாண்டம், ஜூன் 24: மார்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாகோடு பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டிக்காட்டு விளை, பாகோடு பகுதியை சேர்ந்த ஜாண்சன் மகன் ஜெபின்(39). இவர் அதே பகுதியில் 8சென்ட் நிலம் மற்றும் பழைய வீடு ஒன்றையும் விலைக்கு வாங்கி புதிப்பித்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி கடந்த 19-06-2025 அன்று பாகோடு பேரூராட்சி அலுவலகத்தை அனுகினார். அப்போது அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் விஜி (42) வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது வழங்க ரூ. 2000 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெபின் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களுடைய ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய ரூ.2000 லஞ்ச பணத்தை நேற்று இளநிலை உதவியாளர் விஜியிடம் ஜெபின் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் பாகோடு பேரூராட்சி ஊழியர் ஜெஸ்டின் இது போல் வீட்டு வரி விதிப்பது தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஊழியர் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கவுன்சிலர்கள் போராட்டம்
பாகோடு பேரூராட்சி இளநிலை உதவியாளர் விஜி கைது செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாகோடு பேரூராட்சி துணைத் தலைவி ஜெனிமோள் தலைமையில் கவுன்சிலர்கள் செல்வி, சுகுமாரன், பால்ராஜ், ராஜேந்திர பிரசாத், துளசி, டென்னிஸ், சுஜிதா பெனட், ரெங்கபாய், முன்னாள் தலைவர் பால்ராஜ் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து இந்த இளநிலை உதவியாளர் யாரிடமும் லஞ்சம் வாங்காதவர் என்றும், நேர்மையான அதிகாரி என்றும் கூறி லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தின் உட்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதிகாரியின் மேஜை டிராயரில் பணத்தை போட்ட நபர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதை அடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர்.