மார்த்தாண்டம், செப்.2 : மார்த்தாண்டம் அருகே வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடிய நபர், 35 வாழை மரங்களையும் வெட்டி சாய்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் பழையகடை கோட்டைவிளை பகுதியை சேர்ந்தவர் றசல். அவரது மனைவி மதுரையில் உள்ள மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் றசல் தனது மனைவியுடன் மதுரையில் தங்கியுள்ளார். மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் றசலுக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த வில்சன் என்பவரின் பராமரிப்பில் றசல் விட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் றசலுக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ஜன்னல், மின் மீட்டர், குடிநீர் குழாய்கள், வீட்டில் இருந்த தண்ணீர் தேக்கும் பேரல் ஆகியவற்றை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த பாத்திரங்களையும் திருடியுள்ளார். திருடிவிட்டு வெளியே வரும்போது வீட்டையொட்டிய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 35 வாழை மரங்களையும் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மறுநாள் காலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வில்சன், உடனடியாக றசலின் தம்பியான சைலஸ் (49) என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் அங்கு வந்த சைலஸ், விசாரித்த போது முன்விரோதம் காரணமாக பம்மம் வலியக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (44) என்பவர்இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஷ் குமாரிடம் கேட்ட போது, வீட்டையே தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினாராம். இது குறித்து சைலஸ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகேஷ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது, வாழை மரங்களை வெட்டி சாய்த்தது என மொத்தம் ரூ.30 ஆயிரம் சேதம் ஏற்பட்டதாக சைலஸ் கூறினார்.