மார்த்தாண்டம், மே 29: குலசேகரம் பிணந்தோடு பகுதியை சேர்ந்தவர் சிமி செர்லின்(34). இவருக்கும் தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (44) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக ரூ.15 லட்சம் ரொக்கம், கார் வாங்க ரூ.7 லட்சம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் சிமி செர்லினை கணவர் ஸ்டாலின், உறவினர்கள் விஜயா, சிங் அனீஷ், அமிர்தா பாய், உஷா ஆகியோர் சேர்ந்து மேலும் வரதட்சணை வேண்டும் என கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
மேலும் ஸ்டாலின் மனைவி சிமி செர்லினை வெட்டு கத்தியால் கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சிமி செர்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சிமி செர்லின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக கணவர் ஸ்டாலின் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.