திருப்பூர், ஆக.17: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவருமான கணேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும்.
மாநகராட்சி நகராட்சிகளோடு அருகாமை ஊராட்சிகளை இணைப்பதால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். எனவே, கிராமப்புற வேலை உறுதித் திட்டம் போல நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களில் வீடு கட்ட அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மாநில குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.