Sunday, June 4, 2023
Home » மார்கழி மாதத்தின் தெய்வீகச் சிறப்புகளும் உங்களது ராசி பலன்களும்!

மார்கழி மாதத்தின் தெய்வீகச் சிறப்புகளும் உங்களது ராசி பலன்களும்!

by kannappan
Published: Last Updated on

தன்னிகரற்ற வீரியமும், சக்தியும், ஒளியும் கொண்டு விளங்கும் சூரியன், அவரது பகை வீடான விருச்சிக ராசியை விட்டு, நட்பு ராசியானதும், அவரது ஆட்சி வீடானதுமான தனுர் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே “மார்கழி மாதம்” எனவும், “தனுர் மாதம்” எனவும் நாம் கொண்டாடி, பூஜித்து வருகிறோம். மார்கழியின் சிறப்பு!“பிருகஸ்பதி” என பூஜிக்கப்படும் குரு பகவான்தான் சூரியன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஆச்சார்யன் (குரு) ஆவார். அவரது ஆட்சிவீடான தனுர் ராசியில் ஆதவன் (சூரியன்)  வலம் வரும் மார்கழி மாதம் மகத்தான புண்ணிய பலன்களை அளிக்கவல்லது. ஆதலால்தான், மார்கழி மாதத்தை “பக்தி மாதம்” எனவும் நம் புராதன நூல்கள் விவரித்துள்ளன! இதற்குக் காரணமும் உண்டு!உத்தராயணப் புண்ணியக் காலம்!தேவர்களின் உலகிற்கு இரவு காலம் முடிந்து, காலை நேரம் (விடியற்காலை) ஆரம்பிப்பதே இந்த மார்கழி மாதம். தேவர்கள், கந்தவர்கள், மாமுனிவர்கள், வித்யாதர, கின்னர, கிம்புருஷர்கள் ஆகிய அனைத்து தேவருலகத்தினரும் கண்விழித்தெழுந்து, தேவ கங்கையில் புனித நீராடி, உதய சூரியனுக்கு இரு கைகளினாலும் கங்கா தீர்த்தத்தினால் அர்க்கயம் விடும் புனித நேரமே இந்த மார்கழி மாதம்!“தட்சிணாயனம்” எனப்படும் தேவர்களின் இரவு நேரம் முடிந்து, பகல் காலமாகிய “உத்தராயணம்”  ஆரம்பிக்க இருப்பதால், வானோர் உலகங்களின் கதவுகள் திறக்கப்படவுள்ள இந் நேரத்தில், பூஉலக மக்களாகிய நாம் உறங்கிக்கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே, பல நியமங்களை நமது முன்னோர்கள் வழக்கில் கொண்டு வந்துள்ளனர், காலங்காலமாக! சூரியன், கீழ்த்திசையில் உதயமாகும் நேரத்திற்கு “பிரம்ம முகூர்த்தம்” என்ற சிறப்புப் பெயர் உண்டு. “ராகு காலம்”, “எம கண்டம்” போன்ற எவ்விதத் தோஷமும் இந்தப் பிரம்ம முகூர்த்த காலத்தை அணுகவும் முடியாது. இந்தப் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது மனம் மிகவும் தெளிவாக, எவ்வித சலனமும், சபலமும் இன்றி இருப்பதை அனுபவத்தில் உணர முடியும். இறைவனிடம் நமது மனதை முழுமையாகச் செலுத்துவதற்கு உகந்த நேரமிது.பக்திப் பாடல்கள், பஜனை    ஆதலால்தான், நமது முன்னோர்கள், சிந்தனையைச் செலுத்தி, நல்வாழ்வு பெறுவதற்காக, மார்கழி மாத அதிகாலை நேரத்தில் வீதிகள் தோறும் பஜனையில் தவறாது ஈடுபட்டு வந்தனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்களும் கலந்து கொண்டதால், இறைவன் மீது பக்தி வேரூன்றி வளர்ந்து வந்தது. ஒவ்வொரு வீட்டிலும், மக்கள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, வாயிலை சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து, அழகிய கோலம் வரைந்து, தெய்வீகப் பொலிவுடன் விளங்கும். வாயிற்படியில் இரு தீபங்கள் ஏற்றிவைப்பதும் அவசியம்.  இதற்குக் காரணம், மார்கழி மாதம் முகூர்த்த நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீ மகாலட்சுமி எழுந்தருள்வதாக புராதன நூல்கள் விவரித்துள்ளன.திருப்பாவை, திருவெம்பாவை!வீட்டின் பூஜையறையில் இறைவனுக்கு விசேஷ பூஜையும் செய்வார்கள். அதனால், குடும்பத்தில் சுபீட்சம் பெருகும். பல இல்லங்களில் ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் படிப்பார்கள். இதனால் குழந்தைகளின் மனத்தில் பக்தி உணர்ச்சி மேலிடும். இத்தகைய ஈடிணையற்ற தெய்வீகப் பெருமை பெற்றுள்ளதால்தான், கீதாச்சார்யனான பகவான் ஸ்ரீ கண்ணனும், ஸ்ரீமத் கீதையில், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்…!” என அருளியிருக்கின்றான். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும், மார்கழி மாதத்திற்கு?விரத மாதம்!மார்கழி மாதத்தில் நோன்பிருந்து, அதன் பலனாகத்தான், திருவரங்கத்து இன்னமுதன் ஸ்ரீ ரங்கநாதனை பதியாக அடைந்தாள். பூமாலையுடன் பாமாலையுடன், பாமாலையிட்டாள், ஸ்ரீ ஆண்டாள்! எமது அன்பிற்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு, இத்தகைய தெய்வீக மார்கழி மாதத்தில் நடைபெறவுள்ள நவகிரகப் பலன்களைத் துல்லியமாகக் கணித்துச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுகிறோம்.அனுமன் ஜெயந்தி!மார்கழி 8: 23-12-2022, வௌ்ளிக்கிழமை:  ஸ்ரீ அனுமன் ஜெயந்தி – ஸ்ரீ ராம பக்த அனுமனின் அவதார தினம். வாயு புத்திரனும், பரம ஸ்ரீ ராம பக்தனுமான ஸ்ரீ ஆஞ்சநேயரை இன்று பக்தி – சிரத்தையுடன் பூஜிப்போருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், இறைபக்தி ஆகிய நற்பேறுகள் கிட்டும். ஸ்ரீ மத் சுந்தரகாண்டம் படிப்பது மிகப் பெரிய புண்ணிய பலனைத் தரக்கூடியது.வைகுண்ட ஏகாதசிமார்கழி 18: 2-1-2023, திங்கட்கிழமை: வைகுண்ட ஏகாதசி. தேவர்களின் உலகமான சுவர்க்கத்தின் வாயிற்கதவு திறக்கும் மகத்தான புண்ணிய தினம். இன்றைய ஏகாதசி விரதம், இந்திராதி தேவர்களும் அனுஷ்டிப்பதால், “முக்கோடி” ஏகாதசி எனப் புகழ் பெற்றது. ஆண்டு முழுவதும்  ஏகாதசி விரதமிருந்தப் பலன், இந்த ஒரே ஒரு தினம் அனுஷ்டிப்பதால் கிட்டும். திருவரங்கப் பெருமானது திவ்ய தரிசனம் மிகவும் விசேஷமானது.ஆருத்ரா தரிசனம்!மார்கழி 22: 6-01-2023, வௌ்ளிக்கிழமை: ஆருத்ரா தரிசனம். சிதம்பர தரிசனம் விசேஷம். விரதம் இருந்து ஸ்ரீ நடராஜப்பெருமானை பூஜிப்பது, அளவற்ற புண்ணிய பலனை அளிக்கும். பாவங்கள் அகலும்.

மார்கழி 23: 7-1-2023, சனிக்கிழமை:

ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி தினம். திருவண்ணாமலை தரிசனம் மிக விசேஷம்.பரசுராமர் ஜெயந்தி!மார்கழி 24:  8-1-2023, ஞாயிற்றுக்கிழமை: ஸ்ரீ பரசுராமர் ஜெயந்தி. ஜமதக்னி மகரிஷிக்கும்,  ரேணுகாதேவிக்கும் பிறந்த அவதார புருஷர், கேரள மாநிலத்தின் சிருஷ்டிகர்த்தா.

மார்கழி 27: 11-1-2023, புதன்கிழமை:

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை தினம். பிருந்தாவன தரிசனம், மகானின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் வித்வான்களின் கோஷ்டி கானம் போன்றவை  உலகப் பிரசித்தம். கூடாரவல்லி, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளை பூஜிக்கவேண்டிய புண்ணிய தினம்.இம்மாதம் முழுவதும் அதிகாலையிலேயே எழுந்திருந்து, நீராடி, அவரவர்களது குடும்ப வழக்கப்படி பகவானைப் பூஜிப்பது அனைத்து பாவங்களையும் போக்கி, நல்வாழ்வினை அளிக்கும். ஆத்ம பலம் அதிகரிக்கும். மனத்தில்தெளிவும், அமைதியும் பிறக்கும். இத்தகைய தெய்வீக சக்தியும், பெருமையும்  பெற்றுத் திகழும் இந்த மார்கழி மாதத்தில். ஒவ்வொரு ராசியினருக்கும், கிரக நிலைகளின்படி ஏற்படவுள்ள பலா – பலன்களை டிகிரி சுத்தமாகக் கணித்து இங்கு கூறுவதில் மனநிறைவு பெறுகிறோம். எந்தெந்த ராசியினருக்கு பரிகாரம் அவசியமோ, அத்தகைய அன்பர்களுக்கு, எளிய, ஆனால் சக்திவாய்ந்த பரிகாரங்களையும் கூறியிருக்கின்றோம். இவற்றால் எமது அன்பிற்குரிய “தினகரன்” வாசக சகோதரர்களும், சகோதரிகளும் பயனடைந்தால், அதுவே நாங்கள் பெறும் பேறாகும்.விசேஷ குறிப்பு!வரும் பங்குனி மாதம் 15-ம் தேதி (மார்ச் 29, 2023) அன்று சனி பகவான், மகர ராசியை விட்டு, தனது மற்றொரு ஆட்சிவீடான கும்ப ராசிக்கு மாறுகிறார்.  கோள்சார விதிகளின்படி, சனி பகவான் அடுத்த ராசிக்கு மாறுவதற்கு முன், 4 மாதங்களுக்கு – அதாவது 120 நாட்களுக்கு முன்பாகவே, மாறவிருக்கும் ராசியின் பலா-பலன்களைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார். இந்த விதி (Rule) மற்ற கிரகங்களுக்கும் கீழ்க்கண்டவாறு பொருந்தும்! சூரியன்: 6 நாட்கள், சந்திரன்: 3 நாழிகை, செவ்வாய் – 8 நாட்கள், புதன் மற்றும் சுக்கிரன்: 7 நாட்கள், குரு பகவான்: 1 மாதம், ராகு, கேது : 60 நாட்கள்,  சனி: 120 நாட்கள்). நாங்கள் வழங்கும் மார்கழி மாத ராசிப் பலன்கள் மேற்கூறிய ஜோதிட சூட்சுமத்தைக் கணக்கில் கொண்டு கணித்தே கூறப்பட்டுள்ளன. …

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi