கெங்கவல்லி: தெடாவூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கெங்கவல்லி அருகே, தெடாவூர் பேரூராட்சியில் மாரியம்மன், விநாயகர் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 25ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. 26ம் தேதி கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மேல் மாரியம்மன், விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் தெடாவூர் சுற்றுவட்டார த்திலிருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் நடந்தது. கெங்கவல்லி மற்றும் வீரகனூர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை போலீசார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.