சேலம், ஆக. 5: சேலத்தில் ஆடி மாத 3வது வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ேநற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெறும். நேற்று ஆடி 3வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலையே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. மாநகர், மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைபிடாரியம்மன் கோயிலில் அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மெய்யனூர் காளியம்மன் ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரத்திலும், நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் பவள கவச அலங்காரத்திலும், அஸ்தம்பட்டி மாரியம்மன் ஒரு லட்சத்து 5 வளையல் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அய்யந்திருமாளிகை மாரியம்மனுக்கு 10 ஆயிரம் வளையல் கொண்டு சிறப்பு அலங்காரமும், நெத்திமேடு கொடம்பைக்காடு மகா காளியம்மன் 1008 வெற்றிலை, பாக்குகள் மூலம் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு காட்சியளித்தார்.
இதேபோல் சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னாம்மாப்பேட்டை மாரியம்மன், அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனி மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், சித்தேஸ்வரா காளியம்மன், நெத்திமேடு காளியம்மன், தாதகாப்பட்டி காளியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை அம்மன் கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் மாரியம்மன், காளியம்மன் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.