மோகனூர், செப்.5: மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி அண்ணாநகர் மாரியம்மன் கோயில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், மணப்பள்ளி அண்ணா நகரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜையுடன் துவங்கி 2 கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித தீர்த்த கலசத்திற்கு நீர் ஊற்ற கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். விழாவில் தீர்த்தாம்பாளையம், மோகனூர், பேட்டப்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மோகனூர் போலீசார் மேற்கொண்டனர்.