சேலம், ஆக.27: பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு அளித்த தமிழக அரசின் சட்டம் செல்லும் என்றும், பட்டியலின பிரிவில் உள் ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, பட்டியலின மக்களை தனியாக வகைப்படுத்துவது சரியல்ல எனவும், உள்ஒதுக்கீடு அளிப்பதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்காது எனவும் கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் நேற்று, சேலம் பிரபாத் பெரியார்வளைவு பகுதிக்கு அருந்ததியர் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் வக்கீல் பிரதாபன், துணை பொதுச்செயலாளர் ரஜினி, மாநகர செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்கள் மாயாவதியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென மாயாவதியின் உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்பையை பறித்தனர். அப்போது, போலீசாருக்கும், அமைப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரம் மயாவதியை கண்டித்தும், அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை பாராட்டியும் கோஷமிட்டு விட்டு, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.