கிருஷ்ணராயபுரம், ஜூன் 18: மாயனூர் காவிரியிலிருந்து மூன்று பாசன வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கல்லணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் கதவணை காவிரியிலிருந்து 4 பாசன வாய்க்கால்கள் பிரிகிறது. இதில் தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் ஆகிய மூன்று வாய்க்கால்களில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி மாயனூர் காவிரி கதவணைக்கு 9ஆயிரத்து 178 கனஅடியாக தண்ணீர் வரத்து இருந்தது. கதவணை யிலிருந்து காவிரியில் 8ஆயிரத்து 558 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கதவணை காவிரியிலிருந்து தென்கரை வாய்க்கால் 300 கனஅடி, கட்டளை மேட்டு வாய்க்கால் 300கனஅடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வாய்க்காலில் தண்ணீர் கடந்த 4மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 60ஆயிரம் விவசாய நிலம் பாசன வசதி பெறும். புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் எப்போதுமே ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.