கரூர், மார்ச் 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாயனு£ர் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், குழு பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் காவிரி கதவணை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்புகளின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.