மாமல்லபுரம், மே 27: மாமல்லபுரம் அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம், அச்சரவாக்கம், பட்டிக்காடு, எடையூர், கடம்பாடி, மணமை ஆகிய கிராமங்கள் வழியாக குன்னத்தூர் வரை டி.28 தடம் எண் கொண்ட ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், மேற்கண்ட கிராமங்களிலுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க நகர்ப்புறங்களுக்கு வந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போக்குவரத்துத்துறை அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, 14 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம், பூஞ்சேரி சந்திப்பு, மணமை, குன்னத்தூர் வழியாக வெங்கப்பாக்கம் வரை இயக்க மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.