மாமல்லபுரம், ஆக. 3: மாமல்லபுரம் அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாமல்லபுரம் அடுத்த எடையூர், கடம்பாடி, வடகடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர், கொத்திமங்கலம் ஆகிய 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. எடையூர் ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி நடராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் தேன்மொழி சுரேஷ்குமார்(கடம்பாடி), பரசுராமன்(வடகடம்பாடி), சுகுணா சுதாகர்(குழிப்பாந்தண்டலம்), சரஸ்வதி சம்பத்(எச்சூர்), கனகாம்பாள் கணேசன்(கொத்திமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்டி அரசு, திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம், மருத்துவ காப்பீடு திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தோர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், துணை தாசில்தார் சீனிவாசன், துணை சேர்மன் பச்சையப்பன், திமுக பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், விசிக நகர செயலாளர் ஐயப்பன், ஒன்றிய பொருளாளர் எழில் ராவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.