மாமல்லபுரம், ஆக. 5: மாமல்லபுரம் அருகே சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், திருப்போரூரில் இருந்து நெம்மேலி இசிஆர் சாலையை நோக்கி குஜராத் மாநில பதிவெண் கொண்ட சரக்கு லாரி நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திருப்போரூர் – நெம்மேலி இசிஆர் சாலையை இணைக்கும் இடத்தில் வந்த போது சரக்கு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். லாரி சாலையின் நடுகே கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் மீட்பு வாகனம் மூலமாக கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர்.