மாமல்லபுரம்: கழிவுநீர் ஏற்றி செல்லும் லாரி ஒன்று நேற்று மதியம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, மாமல்லபுரம் பூம்புகார் சிற்பகலைத் தூணுக்கு அருகே சென்றபோது, திடீரென கார் ஒன்று குறுக்கிட்டதால், கார் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் இடதுபுறம் லாரியை திருப்பினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் இருந்த கழிவுநீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கடும் துர்நாற்றம் வீசியது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் கை குட்டையால் மூக்கை மூடியபடி சென்றதை காணமுடிந்தது. இந்த, விபத்தில் லாரி டிரைவர் சரவணன் என்பவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து கழிவுநீர் ஆறாக ஓடி, கடும் துர்நாற்றம் வீசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.