
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பாழடைந்த மகளிர் காவல் நிலைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்கின்றனர். குறிப்பாக, பள்ளி – கல்லூரியில் படிக்கும் பெண்கள் ஆசிரியர்களுடன் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுற்றுலா வருகின்றனர். இவர்களின், பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் மாமல்லபுரத்திற்கு ஒரு மகளிர் காவல் நிலையம் கட்டித் தர வேண்டுமென மக்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை, ஏற்று தமிழ்நாடு அரசு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்டான் மண்டபம் தெருவில் ஒரு மகளிர் காவல் நிலையத்தை கட்டி கொடுத்தது.
மேலும், இந்த காவல் நிலையம் எந்த தடையுமின்றி இயங்கி வந்தது. கட்டிடம் பாழடைந்து விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்து பார்ப்பவர் கண்களுக்கு பேய்வீடு போல் காட்சி தந்தது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாழடைந்த கட்டிடத்தின் அருகிலேயே ஒரு புதிய மகளிர் காவல் நிலையம் கட்டி தற்போது இயங்கி வருகிறது. ஆனாலும், அந்த பழைய கட்டிடத்தை இடித்து அப்புறபடுத்தாமல் உள்ளது. இதனால், அந்த கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த கட்டிடத்துக்கு அருகே ஏராளமான வீடுகள், டிஎஸ்பி அலுவலகம், காவல் குடியிருப்பு உள்ளது. அந்த, பாழடைந்த கட்டிடத்தில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகளவில் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளுக்கு இரவு நேரங்களில் படையெடுப்பதால் பொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பாழடைந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து விட்டு, வேறு எதாவது அரசு அலுவலகம் கட்டி பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில, ‘மாமல்லபுரம் கங்கைகொண்டான் மண்டபம் தெருவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகளிர் காவல் நிலையம் கட்டப்பட்டது. இதனை, மகளிர் போலீசார் பராமரிக்காமல் விட்டதால், கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதன் அருகில் புதிய மகளிர் காவல் நிலையம் கட்டி தற்போது இயங்கி வருகிறது. மேலும், இந்த கட்டிடத்தை இடிக்காமல் சம்மந்தப்பட்ட துறையினர் அப்படியே வைத்துள்ளனர். தமிழகத்தில், எத்தனையோ அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், மாமல்லபுரம் டவுனில் ஒரு இடம் வீணாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பாழடைந்து வீணாகும் பழைய மகளிர் காவல் நிலையத்தை இடித்து விட்டு வேறு எதாவது அரசு அலுவலகம் கட்டி பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.