திருவள்ளூர், அக். 26: கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 3.2.2023 அன்று தொடங்கப்பட்டு 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் 100வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது என்றும் எனவே இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அடுத்த கட்ட நிகழ்ச்சியானது 2023 ஜூலை மாதம் தொடங்கியது. மேலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள், நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன.
மேலும் இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி’, ‘தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பரப்புரையின் தொடர்ச்சியாக மாபெரும் தமிழ் கனவு என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தில் இயங்கி வரும் பிரியதர்ஷினி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகமும் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து நிகழ்ச்சி நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் அறிவுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. அதேபோல் சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன.