மானூர், ஜூன் 25: மானூர் அருகே காற்றாலை உபகரணங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேவர்குளம், உசிலங்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (45). மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலபிள்ளையார்குளத்தில் உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் தேதியன்று கருப்பசாமி, தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு பிளேட்டுகள் (சுமார் 1500 கிலோ எடை கொண்டது) எடுத்துவைத்து விட்டு சென்றார்.
பின்னர் 22ம் தேதி காலை மீண்டும் வந்து பார்த்தபோது இரும்பு பிளேட்டுகளை காணவில்லை. இவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து தெரியவந்ததும் பதறிய கருப்பசாமி, இதுகுறித்து மானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த எஸ்.ஐ. சஜீவ் விசாரணை மேற்கொண்டார். இதில் தெற்கு பனவடலிசத்திரம், மேலத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் (29), சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிரிபத்மநாதன் (18), மகேந்திரன் (26) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் எஸ்.ஐ. சஜீவ் கைது செய்தார்.