நெல்லை,ஆக.1: மானூரில் நடைபாதை தகராறு முன்விரோதத்தில் பெண்ணை கம்பியால் அடித்து கொலை செய்த வாலிபருக்கு நெல்லை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம் மானூர் கீழப்பிள்ளையார்குளம் குறிச்சிநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பார்வதி (48). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராமசாமி மகன் காளியப்பன் (40), அவரது தம்பி கணேசன் (37), உறவினர்கள் கணபதி (70), பாலமுரளிகிருஷ்ணா (38) ஆகியோருக்கும் இடையே நடைபாதை தகராறு முன்விரோதம் இருந்துவந்தது.
இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு ஜன.1ம் தேதி சுப்பிரமணியன் மனைவி பார்வதி அதிகாலையில் வீட்டு முற்றத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து நின்ற காளியப்பன்(40), கணேசன் (37), கணபதி (70) ஆகியோர் பார்வதியிடம் தகராறு செய்து கம்பியால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து பார்வதியின் கணவர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி காளியப்பன், கணேசன், கணபதி, பாலமுரளிகிருஷ்ணா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட காளியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500ம், கணேசனுக்கு ரூ.11 ஆயிரம் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனையும், கணபதிக்கு ரூ.11 ஆயிரம் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதித்தும், பாலமுரளிகிருஷ்ணாவை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். அபராத தொகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.