நாமக்கல், செப்.13: நாமக்கல்லில், அனைத்து துறை மானியத்துடன் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளை உள்ளடக்கிய, மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், வரும் 14ம் தேதி காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, கால்நடைத்துறை, கைத்தறித்துறை, தாட்கோ, கதர் கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்து மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கும், கடனுதவிக்கான வசதியமைப்புகள் வழங்கப்படும். மேலும், கடன்தொகை விடுவிப்பு குறித்து, பயனாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் இக்கடன் திட்ட முகாமில் ஏற்பாடுகள் செய்து தரப்படும். எனவே, தொழில் முனைவோர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், புதியதாக கடனுதவி பெற விரும்புபவர்கள் தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் துவங்கப்படும் தொழில் குறித்த திட்ட அறிக்கைகளுடன் நேரில் வந்து, முகாமில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.