மானாமதுரை, செப். 3: மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடமுயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆலங்குளம், கல்குறிச்சி, கங்கை அம்மன்நகர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் தினசரி செல்லாததால் கடந்த நான்கு மாதங்களாக அவதியடைந்து வந்தனர். இதுவரை பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றநிலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சிவகங்கை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்குறிச்சி விலக்கில் சாலை மறியலில் ஈடுபடமுயன்றனர்.
தகவல் அறிந்து மானாமதுரை தாசில்தார் ராஜா டிஎஸ்பி கண்ணன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் கிராமத்தினர் கூறுகையில், ஊராட்சி மன்றதலைவரும் கவுன்சிலர்களும் இரு பிரிவாக சண்டை போட்டு வருவதால் எங்களுக்கு குடிநீர் தெருவிளக்குகள் குப்பை அகற்றுவது உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்பதால் தனி அலுவலர் நியமித்து அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பதில் அளித்த தாசில்தார் ராஜா வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.